தமிழக அரசின் பட்டு கைத்தறி கண்காட்சி

தமிழக அரசின் பட்டு கைத்தறி கண்காட்சி

Update: 2021-12-17 21:19 GMT
மதுரை
தமிழக கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டு ஜவுளி ரகங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையினை மேம்படுத்த தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்மூலம் நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படுகிறது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் கைத்தறி துறையின் சிறப்பு பட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை மதுரையில் தொடங்கி உள்ளது. கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சி ஜடாமுனி கோவில் தெருவில் உள்ள எல்.என்.எஸ். இல்லத்தில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியில் காஞ்சீபுரம், திருப்புவனம், ஆரணி பட்டு சேலைகள், சேலம் வெண்பட்டு வேட்டிகள், கோவை, திருப்பூர் மற்றும் ராசிபுரம் மென்பட்டு சேலைகள் அனைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பட்டு ரகங்களுக்கு 10 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி தமிழக அரசால் வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு நடந்த பொங்கல் பண்டிகையின் போது நடந்த கண்காட்சியில் ரூ.1 கோடியே 44 லட்சத்திற்கு பட்டு ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்தாண்டு விற்பனை இலக்காக ரூ.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி வருகிற 30-ந் தேதி வரை நடைபெறும் என்றும், அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பட்டு ரகங்களை வாங்கி பயன் அடைய வேண்டும் என்று கலெக்டர் அனிஷ் சேகர் கேட்டு கொண்டார்.

மேலும் செய்திகள்