காரை வழிமறித்து 166 பவுன் கொள்ளை வழக்கில் 6 பேர் கைது
கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் காரை வழிமறித்து 166 பவுன் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் காரை வழிமறித்து 166 பவுன் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
166 பவுன் கொள்ளை
மதுரை தத்தனேரி பகுதியில் தனியார் நகை அடகு நிறுவனத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியை சேர்ந்த மைக்கேல்ராஜ் (வயது 30) உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ந் தேதி மாலையில் அந்த அடகு நிறுவனத்தில் இருந்து 50 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு மைக்கேல்ராஜ், அந்த நிறுவன பணியாளர் செந்தில்குமார், டிரைவர் சரவணன் என 3 பேர் விழுப்புரத்தில் உள்ள கிளை நிறுவனத்துக்கு ஒரு காரில் சென்றனர்.
பின்னர் 8-ந்தேதி இரவு 7 மணி அளவில் விழுப்புரம் கிளை நிறுவனத்தில் இருந்து 166 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் எடுத்துக்கொண்டு மதுரைக்கு காரில் புறப்பட்டனர். நள்ளிரவில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள மலம்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் கார் வந்தபோது பின்னால் மற்றொரு கார் அவர்களை வழிமறித்து நின்றது. இதையடுத்து அந்த காரில் இருந்து இறங்கிய 5-க்கும் மேற்பட்ட கும்பல் அரிவாள் உள்பட ஆயுதங்களை காட்டி மிரட்டி அடகு நிறுவன ஊழியர்களை கீழே இறக்கிவிட்டு 166 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் மற்றும் காரையும் பறித்துக்கொண்டு தப்பியது.
தனிப்படை அமைப்பு
இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் கொட்டாம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் அனாதையாக நின்ற அடகு நிறுவன ஊழியர்களின் காரை மீட்டனர். மேலும் கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்துடன் தப்பிய கொள்ளையர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த சம்பவத்தில் துப்புதுலக்க மேலூர் துணை சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் மதுரை, விழுப்புரம் அடகு கடை நிறுவன ஊழியர்களின் அனைத்து செல்போன் அழைப்புகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த நபர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
6 பேர் கைது
இதில் மதுரை நிறுவனத்தில் டிரைவராக பணிபுரியும் மதுரை துவரிமான் பகுதியை சேர்ந்த மகேஷ்வரனுக்கு(48) தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் விழுப்புரத்தில் இருந்து நகையுடன் கார் வருவது குறித்து சமயநல்லூர் தோடனேரியை சேர்ந்த முத்துப்பாண்டி(46) என்பவருக்கு தகவல் கொடுத்ததும், முத்துப்பாண்டி ஒரு கும்பலை தயார் செய்து காரை வழிமறித்து கொள்ளையடிக்க திட்டம் போட்டதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் விழுப்புரம், மதுரை, தஞ்சாவூர், சிவகங்கை பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்குடி அருகே கல்லல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(21), சிவகங்கையை சேர்ந்த நாராயணன்(41), தஞ்சாவூர் ராஜ்குமார்(36), தஞ்சாவூர் அம்மாபேட்டையை சேர்ந்த மணிகண்டன்(34) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
76 பவுன் பறிமுதல்
மேலும் இவர்களிடம் இருந்து 76 பவுன் நகையை தஞ்சாவூரில் பறிமுதல் செய்து மீட்டனர். மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் சிவகங்கையில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ளவர்கள், மீதமுள்ள நகைகள் குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.