ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்; ரூ.1,200 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.1,200 கோடி பண பரிவர்த்தனை முடங்கியது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 2-வது நாளாக வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ.1,200 கோடி பண பரிவர்த்தனை முடங்கியது.
வேலை நிறுத்த போராட்டம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் நேற்று 2-வது நாளாக வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
300-க்கும் மேற்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளில் பணியாற்றும் 2 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக வங்கி சேவை அடியோடு பாதிக்கப்பட்டதோடு, 2 நாட்களில் ரூ.1,200 கோடி பண பரிவர்த்தனை முடங்கியது.
டாஸ்மாக் பணியாளர்கள் அச்சம்
மேலும் தனியார் வங்கிகளான கரூர் வைசியா வங்கி, பெடரல் வங்கி, தனலட்சுமி வங்கி போன்ற வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களும் கடந்த 2 நாட்கள் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதைத்தவிர மற்ற தனியார் வங்கிகள் வழக்கம்போல் செயல்பட்டன. இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தில் 213 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு தினமும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை மது விற்பனை நடந்து வருகிறது. இந்த பணத்தை டாஸ்மாக் பணியாளர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தான் தினமும் செலுத்தி வருகின்றனர். வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மது விற்பனையான பணத்தை டாஸ்மாக் பணியாளர்கள் வங்கியில் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் டாஸ்மாக் பணியாளர்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர்.