நெல்லையில் பள்ளிக்கூட சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலி

நெல்லையில் பள்ளிக்கூட கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியானார்கள். மேலும் 4 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-12-17 20:39 GMT
நெல்லை:
நெல்லை சந்திப்பு எஸ்.என். ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் எதிரே சாப்டர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கூடத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

சுவர் இடிந்து விழுந்தது

நேற்று காலை 11 மணியளவில் உணவு இடைவேளைக்கு முந்தைய இடைவேளையில் மாணவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றனர். கழிவறைக்குள் பல மாணவர்களும், கழிவறைக்கு வெளியே மறைப்பு சுவர் அருகே மேலும் பல மாணவர்களும் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக கழிவறை சுவர் வெளிப்பக்கமாக இடிந்து விழுந்தது. சுமார் 10 அடி உயரம் கொண்ட அந்த சுவர் திடீரென விழுந்ததால் பலத்த சத்தம் கேட்டது. இதனால் வெளியே நின்று கொண்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது சுவர் இடிபாடுகளுக்குள் மாணவர்கள் சிக்கி இருந்தது தெரியவந்தது. இதுபற்றி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள், போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

3 மாணவர்கள் பலி

இடிபாடுகளை அகற்றிவிட்டு பார்த்தபோது அதில் 7 மாணவர்கள் சிக்கி கிடந்தது தெரியவந்தது. அந்த மாணவர்களை அங்கிருந்து மீட்டனர். அப்போது, நரசிங்கநல்லூர் சத்யா நகரை சேர்ந்த கார்த்திக் மகன் அன்பழகன் (வயது 14), தச்சநல்லூர் கீழஇலந்தைகுளம் வெள்ளக்கோவில் தெருவை சேர்ந்த தினகரன் மகன் விஸ்வரஞ்சன் (13) ஆகிய 2 மாணவர்கள் உயிர் இழந்து கிடந்தனர். இதை பார்த்ததும் சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

நெல்லை பழவூர் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுதீஷ் (11) என்பவன் காயம் அடைந்தான். அவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தான். சுதீஷ் 6 `சி' வகுப்பு படித்து வந்தான். ராமச்சந்திரன் டவுனில் ஒரு கடையில் டெய்லராக வேலைபார்த்து வருகிறார். மாணவன் அன்பழகன் 9 `பி'-வகுப்பும், விஸ்வரஞ்சன் 8 `ஏ 3'-வகுப்பும் படித்து வந்தனர். தினகரன் ரெயில்வே என்ஜின் டிரைவராக பணியாற்றி வருகிறார். கார்த்திக் நெல்லை டவுனில் லாரி புக்கிங் ஆபீசில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

காயம் அடைந்தவர்கள்

சுவர் இடிந்ததில் காயம் அடைந்த மாணவர்கள் விவரம் வருமாறு:-
1. சஞ்சய் (13), தந்தை பெயர் சிவசுப்பிரமணியன், கணேசன் கோவில் தெரு, தச்சநல்லூர். சஞ்சய் 8 `ஏ3' வகுப்பு படித்து வருகிறான்.
2. இசக்கி பிரகாஷ் (14). தந்தை பெயர் முத்துமாலை, நபிகள் நாயகம் தெரு, பாட்டப்பத்து, நெல்லை டவுன். இசக்கி பிரகாஷ் 9 `பி' வகுப்பு படித்து வருகிறான்.
3. சேக் அபுபக்கர் கித்தானி (17), தந்தை பெயர் பீர் முகைதீன், செந்தமிழ்நகர், வாகைக்குளம். சேக் அபுபக்கர் கித்தானி பிளஸ்-2 ‘பி’ வகுப்பு படித்து வருகிறார்.
4. அப்துல்லா (12), தந்தை பெயர் பாபு, சம்சு நகர், கொண்டாநகரம், அப்துல்லா 7 `ஏ 1' படித்து வருகிறான்.
காயம் அடைந்த 4 மாணவர்களும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வகுப்பறைகள் சூறை

தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை கமிஷனர்கள் கே.சுரேஷ்குமார், டி.பி.சுரேஷ்குமார் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். 

இதற்கிடையே, பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் பலியானதை அறிந்த மற்ற மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். மீட்பு நடவடிக்கையில் ஆசிரியர்கள் மெத்தனமாக இருந்ததாக கூறியும், சம்பவ இடத்துக்கு தாமதமாக வந்ததாகவும் கூறி பள்ளி வகுப்பறையில் இருந்த மேஜைகள், நாற்காலிகள், டியூப் லைட்டுகள், பூந்தொட்டிகள் போன்றவற்றை தூக்கி வீசி சூறையாடினர். அலுவலகம் மற்றும் ஆசிரியர்களின் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் பள்ளிக்கூடம் போர்க்களம்போல காட்சி அளித்தது. மாணவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.

சாலை மறியல்

இருந்தபோதும், ஆவேசம் அடங்காத மாணவர்கள் பள்ளிக்கூடம் முன்பு சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீஸ் துணை கமிஷனர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அனைத்துக்கட்சியினர் தர்ணா

இந்தநிலையில் சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் அனைத்து கட்சியினர் அங்கு திரண்டு வந்தனர். பள்ளிக்கு வெளியே ெமயின் ரோட்டில் அமர்ந்து சாலைமறியல், தர்ணா போன்றவற்றில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இந்த போராட்டத்தில் இறங்கினார்கள். அப்போது அங்கு வந்த போலீசாருக்கும், சாலைமறியலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்து மக்கள் கட்சியினரும் அங்கு திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டார்கள். அவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினார்கள். அதன்பின்னர் அந்த கட்சியினர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதுபற்றி அந்த கட்சியின் மாவட்ட தலைவர் உடையார் கூறும்போது, பள்ளி கட்டிடம் சரியாக பராமரிக்கப்படவில்லை. சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அப்போது அதன் உறுதித்தன்மையை ஆய்வு செய்து இருக்க வேண்டும். எனவே, தமிழக அரசு அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து மாணவர்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும், என்றார்.

பெற்றோர்கள் திரண்டனர்

பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் பலியான சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பதறியடித்தவாறு பள்ளிக்கு வந்தனர். தங்கள் மகன்கள் எங்கு இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள அங்கும் இங்கும் தேடி அலைந்தனர். பின்னர் மகன்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாக வீட்டுக்கு திரும்பினர்.

மேலும், பல மாணவர்கள் தங்கள் பெற்றோர் பள்ளிக்கு வருவதற்கு முன்னரே வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் அந்த மாணவர்களின் பெற்றோர் பரிதவித்தபடி குழம்பி நின்று கொண்டிருந்தனர். வீட்டுக்கு மகன்கள் திரும்பிய தகவல் கிடைத்த பின்னர் பள்ளியில் இருந்து வீடு திரும்பினர். இதனால் பள்ளி வளாகம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

தாளாளர் உள்பட 3 பேர் கைது

இதற்கிடையே, பள்ளி சுவர் இடிந்து மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக பள்ளி தாளாளர் செல்வகுமார், தலைமை ஆசிரியை ஞானசெல்வி, கட்டிட ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேல்விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்