மேம்பாலத்தில் மினி லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மினிலாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-17 19:41 GMT
குழித்துறை, 
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் மினிலாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மினிலாரி தீப்பிடித்தது
கொல்லங்கோட்டில் இருந்து நேற்று மாலை துணிமணிகளை ஏற்றிக் கொண்டு மினிலாரி ஒன்று நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது. துணிமணிகள் ஏராளமான அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. மினி லாரியை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் அனீஷ் (23) என்பவர் ஓட்டினார்.
இந்தநிலையில் மார்த்தாண்டம் சந்திப்பை தாண்டி மேம்பாலத்தில் மினிலாரி சென்றது. அப்போது திடீரென மினிலாரி தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் அனீஷ், உடனடியாக வாகனத்தை நிறுத்தி விட்டு அதிலிருந்து வெளியே குதித்தார். அடுத்த சில நிமிடங்களில் மினிலாரி கொளுந்து விட்டு எரிந்தது.
தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்
உடனே அந்த பகுதியில் நின்றவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. அதே சமயத்தில் வாகனத்தின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த துணிமணிகள் அடங்கிய பெட்டிகளை அங்கிருந்து அகற்ற முயற்சித்தனர். இதில் பெரும்பாலான பெட்டிகள் அகற்றப்பட்டன. சில பெட்டிகள் மட்டும் தீப்பிடித்து அதிலிருந்த துணிமணிகள் தீக்கிரையானது.
இதற்கிடையே குழித்துறை தீயணைப்பு நிலைய பொறுப்பாளர் சேம் ராபின்சன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். 
இந்த தீ விபத்தில் வாகனத்தின் முன் பக்கம் முழுவதும் எரிந்து நாசமானது. என்ஜின் சூடானதால் மினிலாரி தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீரென ஓடும் மினிலாரி தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்