மீண்டும் களை கட்டிய திற்பரப்பு அருவி

8 மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் மீண்டும் திற்பரப்பு அருவி களை கட்டியது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

Update: 2021-12-17 18:58 GMT
திருவட்டார், 
8 மாதங்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் மீண்டும் திற்பரப்பு அருவி களை கட்டியது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
அருவிக்கு செல்ல தடை
கொரோனா பரவல் காரணமாக குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி முதல் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக அருவியில் குளியல், படகு சவாரி ஆகியவை நிறுத்தப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து வந்தனர். 
இதற்கிடையே ஆகஸ்டு மாதம் சிறிய அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகள் தடுப்பணை அருகில் செல்லவும், படகு சவாரி செய்யவும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் திற்பரப்பு தடுப்பணை பகுதியில் படகு சவாரி செய்து         மகிழ்ந்த னர். அதே சமயத்தில் அருவியில் குளிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் அவர்கள் திரும்பி சென்றதை காண முடிந்தது.
மீண்டும் அனுமதி
இந்தநிலையில் நேற்று முதல் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் 8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் நேற்று அருவியில் உற்சாக குளியல் போட்டனர்.
தற்போது அருவியில் தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. இதனால் அருவியின் இடது புறத்தில் மிதமாக தண்ணீர் பாயும் இடத்தில் மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி மட்டும் செய்யலாம் என நினைத்து தான் வந்தோம். வந்த பிறகு தான் திற்பரப்பு அருவியிலும் குளிக்கலாம் என்பதை அறிந்து கொண்டோம். இதனால் அருவியில் உற்சாகமாக குளித்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
முதல் நாள் என்பதால் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. இனி வரும் நாட்களில் திற்பரப்புக்கு மக்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக கவசம் கட்டாயம்
மேலும் இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சி நிர்வாக அதிகாரி பெத்ராஜ் கூறுகையில், திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் நேரம் தவிர ஏனைய நேரங்களில் முக கவசம் அணிந்து நடமாட வேண்டும். கடைகள் அனைத்திலும் சானிட்டைசர் வைப்பதற்கு அறிவுறுத்தியுள்ளோம். தற்போது பேரூராட்சி நிர்வாகம் தான் நுழைவு கட்டணம், வாகன நிறுத்த கட்டணம் ஆகியவற்றை வசூலிக்கும். வரும் பிப்ரவரி மாதம் பொது ஏலம் விடப்படும். முடிந்த அளவுக்கு தேவையான வசதிகள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு செய்யப்படும்” என்றார்.

மேலும் செய்திகள்