சேதுராயனேந்தல் கண்மாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சாலை மறியல்
நரிக்குடி அருகே சேதுராயனேந்தல் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காரியாபட்டி,
நரிக்குடி அருகே சேதுராயனேந்தல் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சாலை மறியல்
நரிக்குடி அருகே சேதுராயனேந்தல் கண்மாய்க்கு தண்ணீர் வரும் கலுங்கை உயர்த்தி அடைத்து வைத்திருப்பதாக கூறி, தண்ணீர் திறக்கக்கோரி சேதுராயனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் நரிக்குடி-பார்த்திபனூர் நெடுஞ்சாலையில் நேற்று காலை 10 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனை அறிந்த திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணன், நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாராயணன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பேச்சுவார்த்தை
அங்கு மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் மறையூர் கண்மாய் உள்ள கலுங்கு சுவரின் ஒரு பகுதியை உடைத்து தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்து கலுங்கை உடைக்க அனைத்து அதிகாரிகளும் சென்றனர். ஆனால் மறையூர் கலுங்கில் மறையூர் கிராம பொதுமக்கள் திரண்டு நின்று கலுங்கை உடைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே இருந்த படியே தான் தண்ணீர் செல்ல வேண்டும் என்று கூறினர்.
அப்போது அங்கு வந்த நரிக்குடி தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் போஸ்தேவர், கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இருதரப்பு மக்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீஸ் குவிப்பு
அப்போது கிருதுமால் நதியில் வரும் தண்ணீரை முழுமையாக மறையூர் கண்மாய்க்கு திருப்பி விடப்பட்டு கண்மாயை பெருக்கி அதன் பின்னர் தண்ணீரை சேதுராயனேந்தல் கண்மாய்க்கு விட முடிவு செய்தனர்.அதன் அடிப்படையில் தண்ணீர் மறையூர் கண்மாய்க்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால் சேதுராயனேந்தல் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு சாலை ஓரத்தில் அமர்ந்து தண்ணீர் திறந்தால் தான் வீடுகளுக்கு செல்வோம் என அமர்ந்திருந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. அருப்புக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சகாய ஜோஸ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.