தடை செய்யப்பட்ட 400 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
கூத்தாநல்லூரில் தடை செய்யப்பட்ட 400 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கூத்தாநல்லூர்;
கூத்தாநல்லூரில் தடை செய்யப்பட்ட 400 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
கூத்தாநல்லூர் நகராட்சியில் சுகாதார கேடு விளைவிக்கும் பாலித்தீன் பைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், சுகாதார மேற்பார்வையாளர்கள் வாசுதேவன், அண்ணாமலை மற்றும் சுகாதார பணியாளர்கள் கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி கடைவீதியில் உள்ள கடைகள் மற்றும் நேருஜி ரோடு, சின்னப்பள்ளி ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
பறிமுதல்
அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட 400 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகளை விற்பனை செய்த கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது. இது குறித்து நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி கூறியதாவது தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்வது குற்றம். இதனை மீறி விற்பனை செய்தால் நகராட்சி நிர்வாகம் அந்த கடைகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கும்.
எனவே, தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், இது போன்ற செயல்கள் தொடராமல் தடுக்க நகராட்சி சுகாதார நிர்வாகம் தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.