ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு- மராட்டிய தேர்வு கழக கமிஷனர் அதிரடி கைது

மராட்டியத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு தொடர்பாக மாநில தேர்வு கழக கமிஷனர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.88 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-12-17 17:05 GMT
படம்
மும்பை, 

மராட்டியத்தில் ஆசிரியர் தகுதி தேர்வில் முறைகேடு தொடர்பாக மாநில தேர்வு கழக கமிஷனர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.88 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு 
மராட்டியத்தில் வீட்டு வசதி மற்றும் ஏரியா வளர்ச்சி ஆணையத்தில் (மகாடா) உள்ள 565 காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்க இருந்தது. இந்த தேர்வை சுமார் 53 லட்சம் பேர் எழுத இருந்தனர். எனினும் கடைசி நேரத்தில் தேர்வு வினாத்தாள் வெளியானதாக கிடைத்த தகவலை அடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்வு நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஜி.ஏ. சாப்ட்வேர் தனியார் நிறுவன இயக்குனர் பிரிதிஷ் தேஷ்முக் உள்பட 6 பேரை புனே போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த சாப்ட்வேர் நிறுவன இயக்குனர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களின் அடையாள அட்டை, ஹால்டிக்கெட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் தகுதி தேர்விலும் முறைகேடுகள் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில் கைதானவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். அப்போது கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆசிரியா் தகுதி தேர்வில் முறைகேடுகள் நடந்தது அம்பலமானது.

இதில் மாநில தேர்வு கழக கமிஷனர் துக்காராம் சுபே மற்றும் கல்வித்துறை ஆலோசகர் அபிஷேக் சாவரிக்கர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 

தேர்வு கழக கமிஷனர் கைது
இதையடுத்து மாநில தேர்வு கழக கமிஷனர் துக்காராம் சுபே மற்றும் அபிஷேக் சாவரிக்கரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். 
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "துக்காராம் சுபே, சம்பந்தப்பட்ட சாப்ட்வேர் நிறுவனம் மூலமாக தேர்ச்சி பெறாத தேர்வர்களையும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண்களை மாற்றி உள்ளார். இதற்காக தேர்வரிடம் தலா ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை லஞ்சம் வாங்கி உள்ளார். இதன் மூலம் ரூ.4¼ கோடி கிடைத்து உள்ளது. இதில் ரூ.1.70 கோடியை துக்காராம் சுபே எடுத்து கொண்டு இருக்கிறார். மற்ற பணத்தை சாப்ட்வேர் நிறுவன இயக்குனர் உள்ளிட்டவர்கள் பங்கிட்டு உள்ளனர்" என்றார்.

இந்த வழக்கு தொடர்பாக போலீசார் துக்காராம் சுபேயிடம் இருந்து ரூ.88 லட்சம் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய மதிப்பெண் மாற்றப்பட்ட தேர்வர்கள் பட்டியல் அடங்கிய லேப்-டாப்பும் புல்தானாவில் உள்ள பிரிதிஷ் தேஷ்முக்கின் உதவியாளர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

தேர்வு ரத்து இல்லை
இந்த சம்பவம் குறித்து மாநில தேர்வு கழக சேர்மன் தத்தாரே ஜக்தாப் கூறுகையில், ‘‘ஜனவரியில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வை முழுமையாக ரத்து செய்யும் திட்டம் தற்போது இல்லை. போலீசார் முறைகேடு குறித்து விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் விவரங்கள் கிடைக்கும். அந்த விவரம் கிடைத்த பின் அதை அரசுக்கு அனுப்பி வைப்போம். ஒட்டுமொத்த ஆசிரியர் தகுதி தேர்வு முடிவையும் ரத்து செய்ய மாட்டோம். தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது நேர்மையாக எழுதிய மாணவர்களுக்கு அநீதியாக அமையும். 
தேர்வு கழக கமிஷனர் பொறுப்பில் இருந்து துக்காராம் சுபே நீக்கப்பட்டுள்ளார். புதிய கமிஷனரை நியமிக்க அரசின் உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்" என்றார்.

மேலும் செய்திகள்