போக்சோவில் கூலி தொழிலாளி கைது
16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களும் சிக்கினர்.
பொள்ளாச்சி
16 வயது சிறுமியை பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களும் சிக்கினர்.
சிறுமிக்கு திருமணம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வீரக்குமார்(வயது 20). இவர் கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் இவருக்கும், கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.
இதுகுறித்து கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென்று, அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்கள்.
போக்சோவில் கைது
விசாரணையில், அந்த சிறுமி கோவை மாநகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்ததும், திருமணத்துக்கு பிறகு அவரை கட்டாயப்படுத்தி வீரக்குமார் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வீரக்குமார் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். இதேபோன்று வீரக்குமாரின் பெற்றோர், சிறுமியின் பெற்றோர் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.