திண்டிவனத்தில் கூடுதல் பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
திண்டிவனத்தில் கூடுதல் பஸ் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்சில் படிக்கட்டு பயணம் மேற்கொள்வதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இது தொடர்பாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் போலீசார் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் படிக்கட்டு பயணங்களை தவிர்க்க தேவையான இடங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் போக்குவரத்து கழகத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாலை மறியல்
இந்த நிலையில், திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பல்வேறு கிராமங்களில் இருந்தும் திண்டிவனம் இந்திராகாந்தி பஸ் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து டவுன் பஸ்சில் ஏறி கல்லூரிக்கு செல்வது வழக்கம்.
வழக்கம் போல் நேற்று காலை கல்லூரிக்கு செல்ல இந்திராகாந்தி பஸ் நிலையத்துக்கு வந்த மாணவர்கள், திடீரென அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூடுதல் பஸ் வசதி
இதுபற்றி தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நாங்கள் கல்லூரி செல்லும் நேரத்தில் 2 டவுன் பஸ்தான் இயக்கப்படுகிறது.
இதனால் அதில் கூட்ட நெரிசல் மிகுந்துள்ளதால், நாங்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்து தான் கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதுபோன்ற பயணத்தை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் கூடுதலாக 2 பஸ்களை இயக்க ஏற்பாடு செய்தனர். இதன் பின்னர் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு, கல்லூரிக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.