லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடக்கிறது
முன்னாள் அமைச்சர்கள் மீது நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெறுகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
திருவண்ணாமலை
முன்னாள் அமைச்சர்கள் மீது நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெறுகிறது என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
உள்ளாட்சி தேர்தல்
திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பா.ஜ.க. மண்டல தலைவர்கள் கூட்டம் இன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலை எப்போது அறிவித்தாலும் அதனை சந்திப்பதற்கு பாரதீய ஜனதா கட்சி தயாராக உள்ளது. கட்சி வளர்வதற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் என்பது முக்கியமான ஒரு அங்கம். அதனால் நாங்கள் இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பார்க்கிறோம்.
தமிழகத்தில் பல வருடங்களாக பல்வேறு காரணங்களுக்காக உள்ளாட்சி பிரதிநிதி இல்லை. மாடல் பிரதிநிதிகளாக இருப்பதே எங்கள் இலக்கு.
இன்னொரு கட்சி செய்த தவறுகளை நாங்களும் செய்து விட கூடாது என்பதில் தெளிவாக இருகிறோம். தமிழகம் எப்பொழுதுமே நல்ல ஒரு அரசியல் நாகரீகம் உள்ள மாநிலம். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மாநில போலீசார் யூடியூப், பேஸ்புக் போன்றவற்றில் கருத்துகள் தெரிவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் மூலம் கைது செய்து வருகின்றனர். தேச துரோக வழக்குகளும் போடுகின்றனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் கட்சி வளர்ச்சியை தடுப்பதற்காக இவ்வாறு செய்கிறது. இதனை பா.ஜ.க. எதிர்க்கிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்கள் மீது புகார் கொடுத்தும் தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
பொங்கல் பரிசு தொகையால் பல்வேறு தரப்பு மக்கள் பயன்பெற்று வருகின்றனர். எனவே மாநில அரசு இதனை பரிசீலனை செய்து பொங்கல் பரிசு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர்கள் மீது நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெறுகிறது.
தமிழக முதல்- அமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது என்னென்ன கருத்து சொன்னாரோ அது தான் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு புகார்களாக உள்ளது. அவர்கள் ஆதாரத்தை காட்ட வேண்டும். ஆதாரம் கொடுக்காமல் அவதூறு பரப்புவது சிறந்த எடுத்து காட்டாக இருக்காது.
ஆளும் கட்சியினர் தேர்தலுக்கு முன்பு பேசியதையே தற்போது நடைமுறை படுத்துவதாக நாங்கள் பார்க்கின்றோம்.
திருவண்ணாமலையில் மத்திய அரசின் திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆதாரபூர்வமாக 2 அல்லது 3 நாட்களில் சென்னையில் வைத்து தெரிவிப்பேன்.
அடுத்து பா.ஜ.க. என்ன செய்யபோகிறது என்பதையும் தெரிவிப்பேன். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு யானை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபுவை நானே நேரில் சென்று வலியுறுத்துவேன்.
பக்தர்கள் வேதனை
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல முடியவில்லை என்று லட்சக்கணக்கான பக்தர்கள் வேதனை அடைந்து உள்ளனர். பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை அரசியலை தாண்டி நடைபெறாமல் இருக்க தமிழக அரசு காவல் துறையினரை கம்பீரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். குறிப்பாக முப்படை தலைமை தளபதி சம்பவத்தில் மாநில அரசு 100-க்கு 100 சதவீதம் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் தமிழக அரசு நடந்து கொண்ட விதம் முதல்-அமைச்சரில் தொடங்கி கடைசி மனிதன் வரை பெருமைப்படும் வகையில் தமிழகம் இந்தியாவில் பெருமை மிகுந்த மாநிலமாக நடந்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் சி.ஏழுமலை, மாவட்டத் தலைவர் ஜீவானந்தம், மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்தார்.