திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து நாதஸ்வர கலைஞர் பலி

திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து நாதஸ்வர கலைஞர் பலியானார்.

Update: 2021-12-17 15:58 GMT
வடமதுரை:
திண்டுக்கல் அருகே ஓடும் ரெயிலில் இருந்து  விழுந்து நாதஸ்வர கலைஞர் பலியானார்.
நாதஸ்வர கலைஞர்
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுத்தேரி பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 50). நாதஸ்வர கலைஞர். இவர் பார்வை குறைபாடு உடையவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது நாதஸ்வர குழுவினர் கச்சேரிக்காக நெல்லைக்கு சென்றனர். அங்கு கச்சேரியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நெல்லையில் இருந்து செங்கல்பட்டுக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தனர்.
அவர்கள் வந்த ரெயில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முத்துகிருஷ்ணன் மட்டும் கழிப்பறைக்கு நடந்து சென்றார். ரெயில் கதவு அருகே சென்ற அவர் திடீரென்று நிலை தடுமாறி, ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.
தண்டவாளத்தில் பிணம்
இதற்கிடையே அந்த ரெயில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது முத்துகிருஷ்ணனை காணாததை கண்டு அவரது நாதஸ்வர குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே இதுகுறித்து திருச்சி ரெயில்வே போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அய்யலூர் வண்டிகருப்பணசாமி கோவில் அருகே தண்டவாளத்தில் முத்துகிருஷ்ணன் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, முத்துகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்