வங்கி ஊழியர்கள் 2 வது நாளாக வேலைநிறுத்தம்
வங்கி ஊழியர்கள் 2 வது நாளாக வேலைநிறுத்தம்
ஊட்டி
நீலகிரியில் 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர்.
வேலைநிறுத்த போராட்டம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து அகில இந்திய வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு உள்பட 9 சங்கங்கள் சார்பில் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வங்கிகளுக்கு செல்லவில்லை.
அவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டது. வங்கி முன்பு வேலைநிறுத்த போராட்டம் குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. ஊட்டி, மஞ்சூர், குன்னூர் உள்பட மாவட்டம் முழுவதும் பொதுத்துறை வங்கி 80 கிளைகள் மூடப்பட்டன.
சுற்றுலா பயணிகள் அவதி
இதனால் அங்கு வந்த வாடிக்கையாளர்கள் காசோலை பரிவர்த்தனை செய்ய முடியாமல் அவதி அடைந்தனர். நகர்ப்புறங்களில் உள்ள ஏ.டி.எம். களில் பணம் நிரப்பப்பட்டு இருந்தாலும், சில ஏ.டி.எம்.களில் பணம் இல்லாமல் இருந்தது.
இதன் காரணமாக பணம் இருக்கும் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்று எடுத்துச்சென்றனர். இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி நீலகிரிக்கு வந்த சுற்றுலா பயணிகளும் பெரிதும் அவதியடைந்தனர்.
500 பேர் பங்கேற்பு
இது குறித்து வங்கி ஊழியர்கள் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள 80 பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 500 பேர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகளில் பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை 2 நாட் களில் மட்டும் ரூ.200 கோடிக்கு பாதிக்கப்பட்டது என்றனர்.