பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் ரூ.125 கோடியில் அடிப்படை வசதிகள்: அமைச்சர் சேகர்பாபு

பெரியபாளையத்தில் உள்ள பவானியம்மன் கோவிலில் ரூ.125 கோடியில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Update: 2021-12-17 14:04 GMT
ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள பவானியம்மன் கோவிலில் ரூ.125 கோடியில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது 2022-ம் ஆண்டுக்கான காலண்டரையும் அவர் வெளியிட்டார்.

பின்னர் பொன்னேரி ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணிய சாமி கோவிலிலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்தராஜன், இணை கமிஷனர்கள் ஜெயராமன், சுதர்சன், கோவில் செயல் அலுவலர் பிரகாஷ் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

ரூ.125 கோடியில் அடிப்படை வசதிகள்

சட்டசபையில் மானியக்கோரிக்கையின்போது,பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில் பக்தர்களின் அனைத்து தேவைகளை நிறைவு செய்யும்வகையில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் ரூ.125 கோடி செலவில் ஏற்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, ரூ.19 கோடியே 99 லட்சத்தில் வரிசை மண்டபம் கட்டுதல், ரூ.15 கோடியே 26 லட்சத்தில் பக்தர்கள் தங்கும் விடுதி, ரூ.14 கோடியே 35 லட்சத்தில் திருமண மண்டபத்துடன் கூடிய அன்னதான கூடம், ரூ.56 கோடியில் பக்தர்கள் தங்குவதற்கான அடுக்குகூடம் (யாத்ரி நிவாஸ்), ரூ.1 கோடியில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி, ரூ.8 கோடியே 50 லட்சத்தில் 9 நிலை ராஜகோபுரம், ரூ.1 கோடியில் கோவில் முன்புறம் ஆரணி ஆற்றங்கரையையொட்டி கருங்கற்கள் மூலம் சுவர் கட்டப்பட உள்ளன.

விரைவில் பணிகள் தொடங்கப்படும்

ரூ.3 கோடியில் அனைத்து சன்னதிகளையும் பழுதுபார்த்து, பழுதடைந்த சீதோஷ்ண ஓடுகளை சீரமைத்தல், வர்ணம் தீட்டுதல், வெளிப்பிரகாரத்தில் கருங்கற்கள் தரைதளம் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு அமைப்பு மேம்படுத்துதல், மின்சாதன அமைப்புகள் மேம்படுத்துதல் மற்றும் தீ தடுப்பு சாதனங்கள் அமைத்தல், ரூ.2 கோடியில் நவீன வசதிகளுடன் கோவில் திருமடப்பள்ளி கட்டிடம் கட்டுதல், 200 மாடுகள் பராமரிப்பதற்கான சுற்றுச்சுவருடன் கூடிய கோசாலை கட்டிடம் கட்டுதல் மற்றும் சாண எரிவாயு அமைப்பு அமைத்தல், ரூ.2 கோடியே 10 லட்சத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல் உள்பட மொத்தம் ரூ.125 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான வரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அப்படங்களை பார்வையிட்டு சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

பாலசுப்பிரமணிய சாமி கோவில்

மேலும், விருந்து மண்டபங்கள், வேப்பஞ்சேலை சாத்துகின்ற இடம், வாகனங்கள் நிறுத்துமிடம், இரவு தங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களுக்கு தங்கும்வசதி, காலணிகள் பாதுகாக்கின்ற இடம், பிரசாத பொருட்கள் தயாரிக்கும் இடம், சுவாமி படங்கள் விற்பனை கூடம், கோசாலையை விரிவுப்படுத்துதல், கோவிலின் சார்பில் தரமான உணவு வழங்குதல் போன்ற அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பொன்னேரி, ஆண்டார்குப்பத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலின் முகப்பு தோற்றத்தை கலை நயத்துடன் அமைக்கவும், அன்னதான கூடத்தை விரிவுப்படுத்தவும், முடி காணிக்கை செலுத்த புதிய கட்டிடம் அமைக்கவும், கழிப்பறை வசதி ஏற்படுத்தவும், குளத்தை சுற்றி சுவர் மற்றும் படித்துறை அமைக்கவும் பெருந்திட்ட மதிப்பீடு தயார் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்