தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் போக்சோ சட்டத்தில் கைதானவர்கள் உள்பட 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் போக்சோ சட்டத்தில் கைதானவர்கள் உள்பட 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடத்தல் வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பிலான 16 டன் முந்திரியை ஏற்றிக் கொண்டு கடந்த 26.11.2021 அன்று ஒரு லாரி தூத்துக்குடி நோக்கி வந்தது. அந்த லாரியை ஹரி என்பவர் ஒட்டி வந்தார்.
லாரி புதுக்கோட்டை அருகே வந்த போது, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் (39), விஷ்ணுபெருமாள் (26), பாண்டி (21), மாரிமுத்து என்ற மாணிக்கம் (30), செந்தில்முருகன் (35), ராஜகுமரன் (26), மனோகரன் (36) ஆகிய 7 பேரும் சேர்ந்த முந்திரி பருப்புடன் லாரியை கடத்தி சென்று உள்ளனர். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, 7 பேரையும் கைது செய்தனர். இதில் ஞானராஜ் ஜெபசிங் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இதே போன்று கோவில்பட்டி வீரவாஞ்சி நகரை சேர்ந்த காளிதாஸ் மகன் கார்த்திக் (19), முத்துப்பாண்டி மகன் சின்னராஜ் (34) ஆகியோரை கொலை முயற்சி வழக்கில் கோவில்பட்டி மேற்கு போலீசார் கைது செய்தனர். கயத்தாறு பன்னீர்குளத்தை சேர்ந்த சுடலைமுத்து மகன் சீனிவாசன் (43) என்பவர் போக்சோ சட்டத்தில் கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். மணப்பாடு சுனாமி காலனியை சேர்ந்த சிலுவை இருதயம் மகன் அஜித் (23) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் குலசேகரன்பட்டினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
குண்டர் சட்டம்
இதைத் தொடர்ந்து முந்திரி பருப்பு கடத்தில் வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிமுத்து என்ற மாணிக்கம், செந்தில்முருகன், ராஜகுமரன் மற்றும் விஷ்ணுபெருமாள் ஆகிய 4 பேர், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக், சின்னராஜ், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சீனிவாசன், அஜித் ஆகிய 8 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 8 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.
நடப்பு ஆண்டில் இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருள் வழக்குகளில் ஈடுபட்ட 22 பேர் மற்றும் போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட 22 பேர் உள்பட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 191 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.