கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தி.மு.க. ஆட்சி வீழ்ந்து அ.தி.மு.க.விடம் வந்து சேரும் தேனி ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தி.மு.க. ஆட்சி வீழ்ந்து இந்த ஆட்சி அ.தி.மு.க.விடம் தானாகவே வந்து சேரும் என்று தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

Update: 2021-12-17 12:33 GMT
தேனி:
அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரியும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பங்களாமேட்டில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தேனி, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் ஜீவாதாரமான முல்லைப்பெரியாறு அணை பராமரிப்பிற்காக அ.தி.மு.க. அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ளது. நீதிமன்றத்தில் வாதாடி முதற்கட்டமாக 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்துவதற்கான வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை பெற்றுத்தந்தது. ஆனால் இந்த அணை விவகாரத்தில் தமிழகத்துக்கான உரிமையை தி.மு.க. விட்டுக் கொடுத்துவிட்டது. இழந்த உரிமையை மீட்டுத் தரும் பொறுப்பு அ.தி.மு.க.வுக்கு உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை
ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை ரூ.5-ம், டீசல் விலையை ரூ.4-ம் குறைப்போம் என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்தது. மத்திய அரசு தனக்கான வரியை குறைத்துள்ளது. ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசலுக்கான மாநிலங்களுக்கான வரியை குறைக்காத ஒரே அரசு தி.மு.க. தான்.
விடியல் தரப்போகுது என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., விடியாத அரசாகவே இருந்து வருகிறது. வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறது. இதனால் தமிழகம் முழுவதும் அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கவில்லை. முதியோர் ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. மாணவர்களுக்கு கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்றார்கள். சட்டமன்றத்தில் நாங்கள் பலமுறை இதுகுறித்து வலியுறுத்தியும் நிறைவேற்றவில்லை. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் ரத்து செய்யப்படவில்லை. கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என்று கூறுகிறார்கள்.
போக்குவரத்து உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் அதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இவர்களை நம்பி வாக்களித்த அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வு
ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தவில்லை. ரேஷனில் மோசமான அரிசியே வழங்கப்படுகிறது. துர்நாற்றம் வீசுவதால் இவற்றை உண்ண முடியவில்லை. மாட்டுக்காவது போடலாம் என்றால் மாடும் இந்த சாப்பாட்டை பார்த்து முறைக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் பளபளவென அரிசி வழங்கினோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2 ஆயிரத்து 500 பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. இதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மினிகிளினிக்குகளை இந்த அரசு மூடி வருகிறது. விலைவாசி உயர்வு எங்கோ போய்விட்டது. குழம்பு, கூட்டு எதுவும் வைக்க முடியாத அளவிற்கு காய்கறிகளின் விலை உள்ளது. எனவே பொதுமக்கள் கஞ்சி மட்டுமே குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆட்சி வீழும்
தூய்மை பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய ஊக்கத்தொகையை வழங்கவில்லை. நீட் தேர்வு ரத்து என்றார்கள். அதையும் செய்யவில்லை. ஆனால் அ.தி.மு.க. கிராமப்புற, ஏழை மாணவர்கள் பலன் பெறும் வகையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை சட்டமாக்கியது. இதனால் ஆண்டுக்கு 6, 7 பேர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த நிலை மாறி தற்போது இதன் எண்ணிக்கை 545 ஆக உயர்ந்துள்ளது. இதுதான் அ.தி.மு.க.வின் சாதனை.
தேர்தல் நேரத்தில் கூறப்பட்ட பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றாததால் மக்கள் மனதில் எழுச்சி ஏற்பட்டுள்ளது. மக்கள் வீதிக்கு வந்து போராடும் காலம் வந்து விட்டது.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் சிறப்பை பொதுமக்கள் தற்போது உணர தொடங்கி விட்டனர். தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தது. தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், மக்களின் போராட்டம் வீதிக்கு வரும். அப்போது இந்த ஆட்சி வீழும். அந்த ஆட்சி தானாகவே அ.தி.மு.க.விடம் வந்து சேரும். இந்த விடியாத அரசின் கவனத்துக்கு பல குறைகளை கொண்டு சென்றும் பதிலே வருவதில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி., அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜக்கையன் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதனால் மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன..

மேலும் செய்திகள்