தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சுற்றுலாத்துறை இயக்குனர், போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒருநபர் ஆணையத்தில் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சுற்றுலா இயக்குனர், போலீஸ் ஐஜி உள்பட 4 பேரிடம் ஒரு நபர் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது

Update: 2021-12-17 11:00 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சுற்றுலா இயக்குனர், போலீஸ் ஐ.ஜி. உள்பட 4 பேரிடம் ஒரு நபர் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது. அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
துப்பாக்கி சூடு
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே நடந்த 32 கட்ட விசாரணையில் 1,016 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,342 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.
சுற்றுலா இயக்குனர்- போலீஸ் ஐ.ஜி
33-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. இதில் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த மாவட்ட கலெக்டர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் 18 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி தொடர்ந்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று 5-வது நாளாக விசாரணை நடந்தது. இந்த விசாரணையில் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் கலெக்டரும், சுற்றுலாத்துறை இயக்குனருமான சந்தீப் நந்தூரி, சி.பி.சி.ஐ.டி போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் ஆகிய 4 பேரும் நேற்று ஆணையம் முன்பு ஆஜராகி வாக்குமூலம் பதிவு செய்தனர். இதுவரை 8 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடமும், ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இன்றும் விசாரணை
இன்றும் (சனிக்கிழமை) தொடர்ந்து விசாரணை நடக்கிறது. பின்னர் வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும் விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்