தோழி வீட்டில் திருடிய பெண் கைது

பெங்களூருவில் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்து தோழி வீட்டில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.11 லட்சம் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

Update: 2021-12-16 21:08 GMT
பெங்களூரு: பெங்களூருவில் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்து தோழி வீட்டில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.11 லட்சம் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

பெண் வீட்டில் திருட்டு

பெங்களூரு ஜே.ஜே.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது வீட்டு பீரோவில் இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கடந்த 15-ந் தேதி காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அந்த பெண்ணின் வீட்டுக்கதவையோ, பீரோவின் கதவையோ உடைத்து மர்மநபர்கள் நகைகளை திருடி செல்லவில்லை என்று தெரிந்தது. அதே நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டுக்கு கடந்த 14-ந் தேதி, அவரது தோழியான டி.ஜே.ஹள்ளியை சேர்ந்த அஜீரா வந்து சென்றதாகவும், அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் போலீசாரிடம் அந்த பெண் தெரிவித்தார்.

தோழி கைது

இதையடுத்து, அஜீராவை பிடித்து போலீசார் விசாரித்த போது, தனது தோழி வீட்டில் தங்க நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார். அதாவது தனது சகோதரரின் திருமண அழைப்பிதழை கொடுக்க தோழி வீட்டுக்கு கடந்த 14-ந் தேதி அஜீரா சென்றிருந்தார். அங்கு வைத்து தன்னுடைய ஆடையை மாற்ற வேண்டும் என்று கூறி, தோழியின் படுக்கை அறைக்கு அஜீரா சென்றுள்ளார். அப்போது பீரோவில் இருந்த தங்க நகைகளை அவர் திருடி சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து, அஜீரா (வயது 26) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.11 லட்சம் மதிப்பிலான 206 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான அஜீரா மீது ஜே.ஜே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்