மேலும் ஒரு வழக்கில் `யூடியூபர்' மாரிதாஸ் கைது

`யூடியூபர்' மாரிதாஸ் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-12-16 20:46 GMT
நெல்லை:
மதுரையை சேர்ந்தவர் `யூடியூபர்' மாரிதாஸ். நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் பலியான சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார் என்று கூறி மாரிதாசை கடந்த 9-ந் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் முப்படை தளபதி இறந்த சம்பவம் குறித்து அவர் தெரிவித்த கருத்து சம்பந்தமாக போலீசார் பதிவு செய்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

இதற்கிடையே, நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர் `யூடியூபர்' மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலீசில் ஒரு புகார் அளித்து இருந்தார். அதில், இந்தியாவில் தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்புகிறார்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் `யூடியூபர்' மாரிதாஸ் பேசி பதிவிட்டிருந்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என குறிப்பிட்டு இருந்தார்.

இதன்பேரில் மேலப்பாளையம் போலீசார் கடந்த 4-4-2020 அன்று `யூடியூபர்' மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக நேற்று முன்தினம் மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் மற்றும் போலீசார், மாரிதாசை கைது செய்தனர்.

அவரை நேற்று நெல்லை 5-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி விஜயலட்சுமி முன் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி, அவரை 30-ந் தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் மீண்டும் அவரை தேனி சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

இதுகுறித்து வக்கீல் குற்றாலநாதன் கூறுகையில், ‘1½ ஆண்டுக்கு பிறகு மாரிதாஸ் கைது செய்யப்பட்டு இருப்பது சட்டவிரோதமானது. இது முழுக்க முழுக்க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாகும். அவருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளோம்’ என்றார்.

மேலும் செய்திகள்