புதுப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மாமனார்-கணவர் கைது
பாளையங்கோட்டையில் புதுப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனாரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக கணவரும் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் எம்.எஸ்சி., எம்.பில்., படித்து முடித்து விட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்து வந்தேன். எனக்கும், பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்த பிச்சைக்கனி (வயது 54) மகன் பிரசாந்த் (25) என்பவருக்கும் கடந்த மே மாதம் 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது எனது பெற்றோர்13 பவுன் நகைகளை வரதட்சணையாக கொடுத்தனர்.
இந்த நிலையில் எனது மாமனார் எனக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். நான் அதனை பலமுறை கண்டித்தும் அவர் கேட்கவில்லை. நான் இதுகுறித்து எனது கணவரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர் அதனை கண்டு கொள்ளவில்லை. மேலும் இதனை யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டி வந்தார். இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர்.
விசாரணையில், பிச்சைக்கனி தனது மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், அதற்கு பிரசாந்த் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பிச்சைக்கனி, பிரசாந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். பிச்சைக்கனி தூத்துக்குடி துறைமுகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.