கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய 8 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன
கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய 8 சாயப்பட்டறைகள் மூடப்பட்டன
சேலம், டிச.17-
சேலம் மாவட்டத்தில் கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றிய 8 சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூடினர்.
சாயப்பட்டறைகள்
மேட்டூர் அருகே உள்ள கொங்குப்பட்டி, சுமைதாங்கி ஆகிய கிராமங்களில் சில சாயப்பட்டறைகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் கழிவுநீரை நிலம் மற்றும் வயல்களில் வெளியேற்றுவதாக சேலம் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதன்பேரில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த கிராமங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது புக்கம்பட்டி கிராமத்தில் 3 சாயப்பட்டறைகள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமலும், சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் கழிவுநீரை வெளியேற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
இதையடுத்து மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் அந்த 3 சாயப்பட்டறைகளும் மூடப்பட்டன. மேலும் அங்கு மின் இணைப்புகளை துண்டித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் கொங்குப்பட்டி மற்றும் சுமைதாங்கி கிராமங்களில் 5 சாயப்பட்டறைகள் வாரியத்தின் அனுமதி பெறாமலும், கழிவுநீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்த சாயப்பட்டறைகளை மூடியதுடன் அங்கு மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.
சாயப்பட்டறைகள் மற்றும் சலவை தொழிற்சாலைகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காமல் கழிவுநீரை வெளியேற்றினால் அவற்றை மூடுவதுடன், மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.