வேலூர் கோட்டை அகழிநீர் வெளியேறும் கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
வேலூர் கோட்டை அகழிநீர் வெளியேறும் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.
வேலூர்
வேலூர் கோட்டை அகழிநீர் வெளியேறும் கால்வாயில் இருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.
கோவிலுக்குள் அகழி தண்ணீர் புகுந்தது
வேலூரில் பெய்த கனமழை காரணமாக கோட்டை அகழியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் அகழி தண்ணீர் புகுந்தது. தொடர்ந்து தண்ணீர் தேங்கி உள்ளதால் கோவில் வளாகம் முழுவதும் பாசி படிந்துள்ளது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்குள் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டுமானால் அகழி நீர்மட்டத்தை குறைக்க வேண்டும். இதற்காக ஆங்கிலேயர்கள் காலத்தில் அகழியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படும் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இந்த கால்வாய், கோட்டை அருகே உள்ள புதிய மீன் மார்க்கெட் அருகே செல்கிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்த கால்வாயை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் மற்றும் கழிவறைகளை கட்டி உள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கால்வாயின் அகலம் மற்றும் ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை ஆங்கிலேயர் கால அகழி உபரி நீர் செல்லும் கால்வாயை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 4 வீடுகளின் சுவர்கள், கழிவறை போன்ற ஆக்கிரமிப்புகளை வீடுகளின் உரிமையாளர்களே அகற்றினர். மேலும் கால்வாய் தூர்வாரும் பணியும், கோவிலில் தேங்கி உள்ள தண்ணீரும் மோட்டார் மூலம் வெளியேற்றும் பணியும் நடந்தது.
கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முழுமையாக தூர்வாரிய பிறகுதான் அகழி தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.