நாமக்கல்லில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் அபேஸ்-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
நாமக்கல்லில் ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாமக்கல்:
ரூ.1 லட்சம் அபேஸ்
நாமக்கல் அருகே உள்ள லத்துவாடி மேல் ஈச்சவாரி பகுதியை சேர்ந்தவர் சிங்கண்ணன் (வயது 49). இவர் நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று முன்தினம் ரூ.1 லட்சம் எடுத்து கொண்டு, ஒரு மஞ்சள் பையில் ஸ்கூட்டரில் வைத்து விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
அங்குள்ள மருந்து கடை முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு கடைக்கு சென்று மருந்து வாங்கி விட்டு வெளியே வந்து பார்த்தபோது ஸ்கூட்டரில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.
கண்காணிப்பு கேமரா
இதுகுறித்து அவர் நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் ஸ்கூட்டரில் இருந்து பணத்தை ஒரு நபர் எடுப்பதும், மற்றொரு நபர் அவருக்கு உதவி செய்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சியை வைத்து ரூ.1 லட்சத்தை அபேஸ் செய்து விட்டு தப்பிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நாமக்கல் நகரில் ஆங்காங்கே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.