திற்பரப்பு அருவியில் குளிக்க இன்று முதல் அனுமதி
8 மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருவட்டார்,
8 மாதங்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திற்பரப்பு அருவி
குமரியின் குற்றாலம் என அழைக்கப்படுவது திற்பரப்பு அருவி ஆகும். இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இத்தகைய சிறப்புமிக்க அருவியில் குளித்து மகிழ்வதற்கென்றே சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.
அருவியின் அருகில் சிறுவர்கள் விளையாட பூங்கா, அருவியின் மேல் பகுதியில் திற்பரப்பு அணைக்கட்டில் படகு சவாரி, கண்களைக்கவரும் சிற்பங்கள் என ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உண்டு. மேலும் பக்தர்களுக்காக சிவாலயமும் உள்ளது.
இன்று முதல் அனுமதி
இந்தநிலையில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 8 மாதமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இந்தநிலையில் திற்பரப்பு அருவியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று அருவியில் குளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அருவி பகுதியில் பாசி பிடித்து வழுக்கும் நிலையில் இருந்த இடங்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.
மேலும் இதுகுறித்து திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாலை 6 மணி வரை குளிக்கலாம்
17-ந் தேதி (அதாவது இன்று) முதல் திற்பரப்பு அருவியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கலாம். இங்குள்ள கடைகள் அனைத்திலும் சானிட்டைசர்கள் வைத்திருக்க வேண்டும். சுற்றுலா பயணிகள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், அருவி நுழைவுக்கட்டணம் மற்றும் வாகன நிறுத்த கட்டணத்தை திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் வசூலிக்கும் என தெரிவித்துள்ளது.
திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளுக்கும், திற்பரப்பில் கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.