ஒப்பந்த பணி ஊழியர்கள் திடீர் போராட்டம்
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை,
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணி
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 700-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தூய்மை பணி, காவல் பணி உள்ளிட்ட பல்நோக்கு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த ஓராண்டிற்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாததுடன் கொரோனா காலத்தில் பணிபுரிந்த இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லையாம். இதனை தொடர்ந்து நேற்று காலை பணிக்கு வந்த 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமரசம்
இதனை தொடர்ந்து மருத்துவக்கல்லூரி நிர்வாகம் சார்பில் மருத்துவமனை மருத்துவஅலுவலர் முகமதுரபீக் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் பணி பாதிப்பு ஏற்பட்டது.