கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
செஞ்சியில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செஞ்சி,
செஞ்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், திண்டிவனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இவர்கள் செஞ்சியில் இருந்து கல்லூரிக்கு செல்ல ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில் மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறுவதும், பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்வதும் வாடிக்கையாகி விட்டது.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று காலை செஞ்சி பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், செஞ்சியில் இருந்து திண்டிவனத்திற்கு கூடுதல் பஸ் இயக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி அறிந்ததும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான், தினமும் கல்லூரிக்கு சென்று வரும் வகையில் காலை மற்றும் மாலையில் 2 அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து மாணவ-மாணவிகள் அனைவரும் கலைந்து, கல்லூரிக்கு சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.