தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி தொடங்கியது
கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி ேநற்று தொடங்கியது.
தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி
கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் நேற்று 11-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி நடந்தது. கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். அமைச்சர் பெ.கீதாஜீவன், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார், ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு தலைவர் சேகர் மனோகரன், 11-வது தேசிய ஜூனியர் ஆக்கி போட்டி தலைவர் செல்லத்துரை அப்துல்லா, கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியின் தொடக்கமாக போட்டியில் பங்கேற்கும் 27 மாநில ஆக்கி அணி வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. தொடர்ந்து ஆக்கி வீரர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். பின்னர் போட்டியை ஆக்கி இந்தியா தலைவர் ஞானேந்திர நிம்ஹோம் தொடங்கி வைத்தார்.
வெற்றி பெற்ற அணிகள்
நேற்று நடந்த முதல் போட்டியில் ஹரியானா ஆக்கி அணியும், தெலுங்கானா ஆக்கி அணியும் மோதின. இதில் ஹரியானா அணி 12- 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டத்தில் பெங்கால் அணியை எதிர்த்து விளையாட வேண்டிய திரிபுரா அணி வராததால், பெங்கால் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த 3-வது ஆட்டத்தில் சண்டிகர் ஆக்கி அணியும் ஆந்திரா ஆக்கி அணியும் மோதின. இதில் 23-0 என்ற கோல் கணக்கில் சண்டிகர் அணி வெற்றி பெற்றது. 4-வது போட்டியில் கர்நாடக ஆக்கி அணியுடன் மிசோராம் ஆக்கி அணி மோதியது. இதில் 24 - 0 என்ற கோல் கணக்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த போட்டியில் மகராஷ்டிரா அணி வெற்றி பெற்றது.