100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே 100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-12-16 16:30 GMT
செஞ்சி, 

செஞ்சி வட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குறிஞ்சிப்பை ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஏற்கனவே உள்ள பணித்தள பொறுப்பாளர்களுடன் தற்போது கூடுதலாக பணித்தள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 
இந்நிலையில் ஏரி வேலை வழங்குவதில் ஊராட்சி மன்ற தலைவருக்கும்,  பழைய பணித்தள பொறுப்பாளர்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக 100 நாள் வேலைகள் நிறுத்தப்பட்டது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதை கண்டித்தும் 100 நாள் வேலை வழங்கக் கோரியும் குறிஞ்சிப்பை கிராம மக்கள் வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் செஞ்சி- திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி தாசில்தார் ராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் நடராஜன், பலராமன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த பிரச்சினையை ஊராட்சி ஒன்றிய அலுவலரிடம் கூறி தீர்வு காண்பதாக தாசில்தார் ராஜன் உறுதி அளித்தார். இதை ஏற்று கிராம மக்கள் மறியலை கைவிட்டு ஒன்றிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
சாலை மறியல் போராட்டத்தால் செஞ்சி-திண்டிவனம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனிடையே மறியலில் ஈடுபட்ட குறிஞ்சிப்பை அ.தி.மு.க. கிளை செயலாளர் வளவன் உள்பட 200 பேர் மீது செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்