மன்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்

அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

Update: 2021-12-16 14:47 GMT
அன்னூர்

அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

தேர்த்திருவிழா

கோவை மாவட்டம் அன்னூரில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவிலில் உள்ள சுயம்பு லிங்கத்தின் இருபுறமும் இறக்கைகள் இருப்பது சிறப்பு வாய்ந்தது ஆகும். மேலும் இந்த கோவில் மேற்றிலை தஞ்சாவூர் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் மாலையில் சாமி திருவீதி உலா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றது. 

தடை விதிப்பு

இதற்கிடையில் கொரோனா பரவலை காரணம் காட்டி தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் திடீரென தடை விதித்தது. அதன்பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று வழக்கமாக 6 மணி நேரம் நடைபெறும் தேரோட்டத்தை 2 மணி நேரத்துக்குள் முடித்துக்கொள்ள வாய்மொழியாக உத்தரவிட்டு அனுமதி வழங்கியது. இதை கடைபிடிப்பதை உறுதி செய்ய 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். 

தேரோட்டம்

இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு அருந்தவ செல்வி உடனமர் மன்னீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து 10.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்