தளியில் மனு வாங்க அதிகாரிகள் மறுப்பு பாஜகவினர் சாலை மறியல்
தளியில் மனு வாங்க அதிகாரிகள் மறுத்ததால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை:
தளியில் மனு வாங்க அதிகாரிகள் மறுத்ததால் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், வெள்ள நிவாரண பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை இணைக்க வலியுறுத்தியும் தளி பஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மண்டல தலைவர் ஹரிஸ் தலைமை தாங்கினார். விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் லோகேஷ்ரெட்டி வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் ரங்கநாத், துணைத்தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் பா.ஜ.க.வினர் ஊர்வலமாக வந்து வேளாண்மை அலுவலகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி மனு கொடுத்தனர். ஆனால் அதிகாரிகள் மனுவை வாங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் விவசாய அணி மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட செயலாளர்கள் ராஜண்ணா, சீனிவாசன், துணைத்தலைவர்கள் பாப்பண்ணா, சீனிவாசரெட்டி, தளி வடக்கு ஒன்றிய தலைவர் பாஸ்கர், கோட்ட அமைப்பு செயலாளர் நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மனோகர், பார்த்திபன், ஹரிஷ் ரெட்டி, வெங்கடேஷ், தானு ரெட்டி, ராமகிருஷ்ண ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.