ஒமைக்ரான் தொற்றில் இருந்து வாலிபர் குணமடைந்தார்
பெங்களூருவில் ஒமைக்ரான் பாதித்த வாலிபர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் முதலில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளான டாக்டருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு: பெங்களூருவில் ஒமைக்ரான் பாதித்த வாலிபர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் முதலில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளான டாக்டருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு
நாட்டிலேயே பெங்களூருவில் தான் முதல் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்தது. அதாவது பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் டாக்டர் மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முதியவர் ஆகிய 2 பேருக்கும் ஒமைக்ரான் வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் டாக்டர் பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முதியவர், தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறி போலி நெகட்டிவ் சான்றிதழ் கொடுத்துவிட்டு பெங்களூருவில் இருந்து தப்பி சென்று விட்டார்.
இதற்கிடையில், கடந்த 1-ந் தேதி தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்திருந்த பெங்களூருவை சேர்ந்த 34 வயது வாலிபருக்கு விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதனால் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், மறுநாள் (2-ந்தேதி) மீண்டும் தனியார் ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
வாலிபர் குணமடைந்தார்
இதையடுத்து, அந்த வாலிபர் பவுரிங் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கடந்த 12-ந் தேதி ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது உறுதியானது. இதனால் கர்நாடகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில் அந்த வாலிபருக்கு பவுரிங் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
அவருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த 2 முறையும், வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. அதைத்தொடா்ந்து, பவுரிங் ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்த வாலிபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
6 நாட்கள் வீட்டு தனிமை
ஆனாலும் அந்த வாலிபர் வீட்டில் 6 நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் என்று மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அவரது உடல் நிலை குறித்து அந்த வாலிபருடன் தினமும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசப்படும் என்றும், 6 நாட்கள் வீட்டு தனிமைக்கு முன்பாக மீண்டும் 3-வது முறையாக வாலிபருக்கு பரிசோதனை நடத்தப்படும் என்றும், அப்போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தால், வீட்டில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டாக்டருக்கு தொடர்ந்து சிகிச்சை
கர்நாடகத்தில் 3-வது நபராக ஒமைக்ரான் பாதித்த வாலிபர், மீண்டு வந்துள்ளார். ஆனால் முதல் முறையாக ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான டாக்டருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை அறிக்கையில், நெகட்டிவ் வந்தால் மட்டுமே பவுரிங் ஆஸ்பத்திரியில் இருந்து டாக்டர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மாநகராட்சி அதிகாாிகள் தெரிவித்து உள்ளனர்.