மங்களூருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை; போலீஸ் நிலையம் சூறை
சமூக ஆர்வலரை தாக்கிய வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்க கோரி மங்களூருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டதுடன், சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்டார்.
மங்களூரு: சமூக ஆர்வலரை தாக்கிய வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்க கோரி மங்களூருவில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போலீஸ் நிலையம் சூறையாடப்பட்டதுடன், சப்-இன்ஸ்பெக்டர் கத்தியால் குத்தப்பட்டார்.
சமூக ஆர்வலர் மீது தாக்குதல்
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா உப்பினங்கடி டவுன் பழைய கேட் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமூக ஆர்வலர் ஒருவரின் மீது முஸ்லிம் அமைப்பை சேர்ந்த 3 பேர் தாக்குதல் நடத்தினர். மேலும் உப்பினங்கடியில் உள்ள கடைகளையும் 3 பேரும் சூறையாடியதாக தெரிகிறது. இதுகுறித்த புகார்களின்பேரில் உப்பினங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்லிம் அமைப்பை சேர்ந்த 3 பேரை பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்று இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை உப்பினங்கடி போலீஸ் நிலையம் முன்பு கூடிய முஸ்லிம் அமைப்பினர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 3 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களை விடுவிக்க போலீசார் மறுத்து விட்டனர். இதனால் அங்கு போராட்டம் தொடர்ந்து நடந்தது.
தள்ளுமுள்ளு
இதையடுத்து நேற்று முன்தினம் மாலை போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் அமைப்பினரிடம் உப்பினங்கடி கூடுதல் பெண் போலீஸ் சூப்பிரண்டு கானா பி.குமார், பண்ட்வால் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா, புத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கிரண்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். அப்போது விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட 3 பேரையும் விடுவித்தால் தான் கலைந்து செல்வோம் என்று முஸ்லிம் அமைப்பினர் பிடிவாதமாக கூறினர். இதனால் ஒருவரை மட்டும் போலீசார் விடுவித்தனர். மற்ற 2 பேரையும் விடுவிக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்லிம் அமைப்பினர் போலீஸ் நிலையத்திற்குள் திரண்டு சென்றனர். இதனால் அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர். அப்போது போலீசாருக்கும், முஸ்லிம் அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டானது. இது சிறிது நேரத்தில் மோதலாக மாறியது.
சப்-இன்ஸ்பெக்டருக்கு கத்திக்குத்து
அப்போது ஆத்திரம் அடைந்த முஸ்லிம் அமைப்பினர் போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்திருந்த பொருட்களை வெளியே தூக்கி வீசி சூறையாடினர். மேலும் போலீஸ் நிலையத்தில் இருந்த பொருட்களை அடித்து, உடைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். அப்போது முஸ்லிம் அமைப்பினர் சிதறி ஓடினர்.
இந்த சந்தர்ப்பத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னாவை யாரோ கத்தியால் குத்திவிட்டனர். இதில் அவருக்கு பலத்த காயம் உண்டானது. மேலும் இந்த மோதலில் 5 போலீசாருக்கு காயம் உண்டானது. போலீசார் நடத்திய தடியடியில் முஸ்லிம் அமைப்பினர் 5 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் 10 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவனே பகவான் மற்றும் உயர் அதிகாரிகள் உப்பினங்கடிக்கு விரைந்து சென்றனர்.
மேலும் சம்பவம் நடந்த போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தினர். மேலும் ஆஸ்பத்திரிக்கு சென்று போலீசாருக்கு ஆறுதல் கூறினர்.
144 தடை உத்தரவு அமல்
மங்களூரு அருகே உப்பினங்கடி போலீஸ் நிலையத்தில் நடந்த வன்முறையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டு ள்ளது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் உப்பினங்கடியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. இந்த தகவலை போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனவனே தெரிவித்தார்.