செங்கோட்டை-கொல்லம் ரெயில் மீண்டும் இயக்கம்
செங்கோட்டை-கொல்லம் பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் இரு மாநில பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
செங்கோட்டை:
தமிழகத்தில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக இந்த ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது. கொரோனா குறைந்ததை தொடர்ந்து இந்த ரெயிலை விரைவு ரெயிலாக மாற்றி இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் 18 மாதங்களுக்கு பின்னர் நேற்று முதல் செங்கோட்டையில் இருந்து கொல்லத்திற்கு இந்த ரெயில் விரைவு ரெயிலாக மீண்டும் இயக்கப்பட்டது. அதன்படி தினமும் காலை 11.35 மணிக்கு செங்கோட்டையில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டு கொல்லத்திற்கு மாலை 3.35 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல் கொல்லத்தில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு செங்கோட்டைக்கு மதியம் 2.20 மணிக்கு வந்தடைகிறது.
செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு பகவதிபுரம், புது ஆரியங்காவு, தென்மலை, இடமண், புனலூர், அவனீஸ்வரம், கொட்டாரக்கரா, எழுகோன், குண்டரா, கிள்ளிக்கோலூர் வழியாக ெகால்லம் சென்றடைகிறது. இந்த ரெயிலில் செங்கோட்டையில் இருந்து கொல்லத்திற்கு செல்ல கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து புனலூர் செல்ல ரூ.30 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 18 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் செங்கோட்டையில் இருந்து நேற்று காலை ரெயில் புறப்பட்டு சென்றதை கொண்டாடும் வகையில் செங்கோட்டையில் ரெயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கிருஷ்ணன், தலைவர் முரளி, ஊடக தொடர்பாளர் ராமன் ஆகியோர் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி ரெயிலை வழியனுப்பி வைத்தனர்.
செங்கோட்டையில் இருந்து கொல்லத்திற்கு ரெயில் இயக்கப்பட்டது குறித்து பயணிகள் கூறும்போது, ‘கொரோனா காரணமாக ரெயில் நிறுத்தப்பட்டு இருந்ததால் மிகவும் சிரமம் அடைந்தோம். செங்கோட்டையில் இருந்து கேரளாவுக்கு செல்பவர்கள் பஸ் போன்ற வாகனங்களில் சென்று வந்தனர். இதனால் அதிகம் செலவானது. அது மட்டுமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தோம். அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். தற்போது ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் இருமாநில பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றனர்.