ஏற்காடு, டிச.16-
ஏற்காட்டில் அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்கக்கோரி மாணவ-மாணவிகளின் பெற்றோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேதமடைந்த அரசு பள்ளி
ஏற்காட்டில் உள்ள புலியூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 105 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு நீண்ட ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தற்போது அது சேதமடைந்து காணப்படுகிறது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் காணப்படுவதால் கட்டிடத்தை சீரமைக்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் கல்வித்துறை, வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்போது ஏற்காட்டில் அடிக்கடி மழை பெய்து வருவதால் பள்ளி கட்டிடம் ஒழுகுவதுடன், வகுப்பறையில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமத்துடன் கல்வி கற்று வருகின்றனர்.
தர்ணா போராட்டத்தால் பரபரப்பு
இந்தநிலையில் நேற்று காலை பள்ளி முன்பு மாணவ-மாணவிகளின் பெற்றோர், பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் பள்ளி கட்டிடத்தை உடனடியாக சீரமைத்து தரக்கோரி பள்ளியில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும், ‘குழந்தைகள் பாதுகாப்பு எங்கள் எதிர்காலம்’, ‘தண்ணீரில் பள்ளி, கண்ணீரில் நாங்கள்’, ‘எங்கள் பள்ளி கட்டிடம் ஒமைக்ரானை விட ஆபத்தானது’ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
தர்ணா போராட்டம் குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி, வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்முருகன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மைதானம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தனர்.
இதில் சமாதானம் அடைந்த பெற்றோர், பொதுமக்கள் மாலை 3 மணிக்கு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.