முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்ட கட்டிடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
காட்பாடியில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்ட கட்டிடத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காட்பாடி
காட்பாடியில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்ட கட்டிடத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான வீடு, உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வேலூர் மாவட்டம், காட்பாடி கல்புதூரில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான காம்ப்ளக்ஸ் உள்ளது. இதன் மாடியில் உள்ள ஒரு அறையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான கட்டுமான நிறுவன அலுவலகம் செயல்பட்டு வந்தது. இங்கு கட்டுமான பொருட்களின் விலையை நிர்ணயம் செய்து அவர்கள் வியாபாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை 6.30 மணிக்கு வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினர் கல்புதூருக்கு வந்தனர். முன்னாள் அமைச்சர் தங்கமணியின் கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வந்த அறையில் அதிரடி சோதனை நடத்தினர்.
கட்டிட உரிமையாளரிடம் விசாரணை
அப்போது அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் சீனிவாசன் 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்டுமான நிறுவன அலுவலகத்தை அவர்கள் காலி செய்துவிட்டனர். மூன்று மாதம் தான் அந்த நிறுவனம் இங்கே செயல்பட்டு வந்தது. இதனால் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்கள் எதுவும் இங்கு இல்லை. கம்ப்யூட்டர் உள்பட அனைத்துப் பொருட்களையும் அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர் என லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் தெரிவித்தார். அதன் பின்னர் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் பல்வேறு கேள்வி கேட்டனர்.
சுமார் 3 மணி நேர சோதனைக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து கிளம்பி சென்றனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது காட்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீசார் காட்பாடி பகுதியில் திடீர் சோதனை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.