அரக்கோணம்
சென்னை மாங்காடு பகுதியை சார்ந்தவர் சாந்தி (வயது 55). இவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள திருநின்றவூர் பொது சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நெமிலிச்சேரியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக மின்சார ரெயில் மூலம் நெமிலிச்சேரி ரெயில் நிலையத்திற்கு சென்று இறங்கினார். பின்னர் அங்கிருந்து தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் திடீரென்று சாந்தியை பிடித்து கிழே தள்ளி விட்டு கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்.
இது குறித்து சாந்தி அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று திருவள்ளுர் ரெயில் நிலையத்தில் சந்தேகப் படும்படியாக இருந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் திருவாலங்காடு சின்னம்மா பேட்டையை சார்ந்த சேகர் மகன் விக்னேஷ் (28) என்பதும், நெமிலிசேரியில் நர்சிடம் 7 பவுன் தாலி செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.