முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் வீடுகள்-நிறுவனங்களில் சோதனை
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 8 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 8 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
அமைச்சரின் உறவினர்கள்
தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை முன்னாள் அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வசித்து வருகிறார். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் நேற்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
நேற்று காலை 6 மணிக்கு இந்த சோதனை தொடங்கியது. பள்ளிபாளையம் மட்டுமின்றி, முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு தொடர்புடைய அனைவரின் வீடுகள், அலுவலகங்களிலும் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை நடத்தினார்கள்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா என 3 மாநிலங்களிலும் 69 இடங்களில் இந்த சோதனை ஒரே நேரத்தில் நடந்ததாக கூறப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர்கள், நிறுவனங்களின் பங்குதாரர்கள் வீடுகளிலும் நேற்று காலையில் இருந்தே சோதனை நடத்தப்பட்டது.
சோதனை
ஈரோட்டில் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகர் மரப்பாலம் 2-வது வீதியில் உள்ள எம்.வரதராஜன் என்கிற சுரேஷ் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இவர் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் உறவினர் என்று கூறப்படுகிறது.
இதுபோல் சூரம்பட்டி ஆசிரியர் காலனி பாரி வீதியில் உள்ள எஸ்.சுரேஷ் என்பவருடைய வீடு, பெரியசேமூர் முனியப்பன்கோவில் வீதியில் உள்ள செந்தில்நாதன், எஸ்.சிவானந்தம் ஆகியோரின் வீடுகள், வீரப்பம்பாளையம் கணபதிநகர் பண்ணைநகர் ரோட்டில் உள்ள பெரியசாமி சின்னத்துரை என்பவரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.
பங்குதாரர்கள்
ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பி அன்டு சி கட்டிடத்தில் 2-வது தளத்தில் உள்ள பி அன்டு சி நிறுவன அலுவலகம், பெருந்துறை கோவை ரோட்டில் உள்ள எஸ்.சதீஸ்ராஜா என்பவருடைய வீடு, சித்தோடு வி.தயிர்பாளையம் பகுதியில் உள்ள எஸ்.ராதாகிருஷ்ணன் என்பவருடைய வீடு, பவானி பூலப்பாளையத்தில் உள்ள எம்.கார்த்தி என்பவருடைய வீடு என மொத்தம் 8 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர்.
இதில் பெரும்பாலானவர்கள் புளூ மெட்டல் நிறுவன பங்குதாரர்களாக உள்ளனர். பிளைவுட் விற்பனை நிலைய பங்குதாரர்களும் உள்ளனர். முன்னாள் அமைச்சரின் மருமகனின் நண்பர்களும் இந்த பட்டியலில் உள்ளனர்.
இவர்களின் வீடுகளில் ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஸ், இன்ஸ்பெக்டர் ரேகா உள்பட 8 குழுவினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். மாலைவரை இந்த சோதனை நீடித்தது.
இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களை போலீசார் உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.