விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி பெரியகுளம் கரையில் உடைப்பு

விராலிமலை ஒன்றியம் கோங்குடிபட்டி பெரியகுளத்தில் கரையில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-12-15 17:45 GMT
ஆவூர்:
கோங்குடிபட்டி பெரிய குளம்
விராலிமலை ஒன்றியம், கோங்குடிபட்டியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட துவான் குளம் என்ற பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் மூலம் சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடந்த நவம்பர் மாதம் வரை பெய்த தொடர் பருவமழையால் துவான்குளம் நிரம்பி அதன் முழு கொள்ளளவை எட்டி கடந்த ஒரு மாதமாக கலிங்கு வழியாக அதன் உபரி நீர் வெளியேறி வருகிறது. 
அந்த குளத்தின் ஒரு பகுதியில் கரையின் அகலமும், உயரமும் சற்று குறைவாக இருந்துள்ளது. இதனால் அங்கு மழைக்காலத்திற்கு முன்னர் நூறு நாள் வேலை ஆட்களை வைத்து உயரம் குறைவான இடத்தில் மண்ணை வெட்டிப் போட்டு கரையை பலப்படுத்தி உள்ளனர். 
தண்ணீர் வெளிேயறுகிறது 
இந்நிலையில் தொடர் மழையால் கரையில் புதிதாக போட்ட மண் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து கொண்டு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டு குளத்திலிருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேறியுள்ளது. நேற்று காலை அவ்வழியே வந்த விவசாயிகள் இதைப் பார்த்துள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்த கோங்குடிபட்டி ஊராட்சி தலைவர் நல்லுச்சாமி மற்றும் பொதுமக்கள் அங்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் அடைப்பை சரி செய்வதற்கு மண்ணை வெட்டி போட்டு உள்ளனர். ஆனால் தண்ணீர் அதிகளவில் வெளியேறியதால் அடைப்பு நிற்கவில்லை.
விவசாயிகள் வேதனை 
இதனால் குளத்திலிருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. உடைப்பு ஏற்பட்டு வெளியேறும் தண்ணீரால் விவசாய நிலங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு உடைப்பில் இருந்து வெளியேறும் தண்ணீரின் அளவு குறைந்தவுடன் கரையின் உடைப்பு சரி செய்யப்படும் என்று அங்குள்ள விவசாயிகள் தெரிவித்தனர். 
வெளியேறும் தண்ணீரானது காட்டாறு வழியே வந்து  பேராம்பூர் பெரியகுளத்தில் நிரம்பி வருகிறது. கோங்குடிபட்டி பெரியகுளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருவதால் அங்கு விவசாயம் செய்துள்ள நெற் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற வேதனையில் விவசாயிகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்