72 பேர் வீரமரணத்தை போற்றும் கிராம மக்கள்
72 பேர் வீரமரணத்தை போற்றும் வகையில் கிராம மக்கள் கோவில் கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ளது கட்ராம்பட்டி கிராமம். இங்கு 2500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மன்னர் ஆட்சி காலத்தின்போது, ஜமீன் மாளிகைக்கு இளம்பெண் ஒருவர் அந்தப்புரத்திற்கு அழைக்கப்பட்டு உள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் தன் தாயாரிடம் கூறி தப்பி கட்ராம்பட்டி கிராமத்திற்குள் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்தநிலையில் அந்த பெண் கட்ராம்பட்டி கிராமத்தில் தஞ்சம் அடைந்ததை அறிந்த ஜமீன் படை அங்கு சென்றது. அப்போது அந்த கிராம மக்கள், அவர்களிடம் எங்கள் கிராமத்தில் தஞ்சம் அடைந்த பெண்ணை உங்களுடன் அனுப்ப முடியாது என தெரிவித்தனர். உடனே ஜமீன் படை அங்கிருந்து புறப்பட்டது. அப்போது சிலர் மன்னருக்கு எதிராக குரல் எழுப்பினர். இதில் ஆத்திரம் அடைந்த படையினர் அந்த கிராமத்தில் உள்ள பெண்ணை மீட்க முயன்றனர். அதை அங்குள்ள ஆண்கள் எதிர்த்தனர். இதையடுத்து நடந்த சண்டையில், புதிதாக திருமணமான 36 ஆண்கள் ஜமீன் படையால் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 36 பேரின் மனைவிகளும் அதே இடத்தில் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தனர். இதை கண்ட இளம்பெண் மற்றும் அவரது தாய் தங்களால் தான் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறி அவர்களும் தீக்குளித்து இறந்தனர்.
இதனால் ஒரே கிராமத்தில் 72 பேர் உயிர் நீத்த இடத்தில் அவர்களது வீரமரணத்தை போற்றும் வகையில் அந்த கிராம மக்கள் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் கடைசி ஞாயிற்றுக் ்கிழமை பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி தற்போது வரை விழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த இடத்தில் உருவமில்லாத பீடத்தை வைத்து 72 தாத்தகாரு நினைவாக வீரகோவில் அமைத்துள்ளனர்.