ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு

மாட்டுக்கொட்டகை அமைத்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

Update: 2021-12-15 17:05 GMT
ராமநாதபுரம், 

மாட்டுக்கொட்டகை அமைத்து தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

வங்கி பிரதிநிதி என்று கூறி

ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரன் மகன் முனீஸ்குமார். இவர் ராமநாதபுரம் நகரில் உள்ள தனியார் வங்கி ஊழியரின் நண்பராவார். அவரின் மூலம் வங்கியின் சார்பில் மாட்டுக் கொட்டகை அமைத்து கொடுக்க கடன் வழங்குவதை அறிந்து கொண்ட முனீஸ்குமார் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று வங்கி பிரதிநிதி என்று அறிமுகமாகி கொண்டார். இதன்படி பலரிடம் மாட்டுக்கொட்டகை அமைத்து கொடுப்பதாகவும் அதற்கு வங்கி கடன் பெற்றுத்தருவதாகவும் கூறி நிலத்திற்கான ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவர்களை வங்கிக்கு அழைத்து சென்று விண்ணப்பித்துள்ளார். இதனை தனது நண்பரின் மூலம் ஒப்புதல் பெறவைத்ததன் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கான வங்கி கடன் தொகை அவரவர் வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளது. 
இதனை அறிந்து கொண்ட முனீஸ்குமார் அவர்களை நேரில் சந்தித்து வங்கி கடன் தொகை உங்கள் கணக்கில் வந்துவிட்டது. அதனை வைத்து வங்கி மூலமாகவே மாட்டுக்கொட்டகை போட்டுத்தருகிறேன் என்று கூறி அவர்களின் பணத்தை தனது கணக்கிற்கு ஏமாற்றி பெற்று மாற்றிக்கொண்டாராம். இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் பலரிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட முனீஸ்குமார் மாட்டுக்கொட்டகை போட்டுத்தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

பணமோசடி

இவ்வாறு ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 524 தொகையை ஏமாந்த பெரியபட்டிணம் மரைக்காநகர் முத்துவேல் மனைவி குப்பம்மாள் (60) என்பவர் இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் மேற்கண்ட முனீஸ்குமார் இதுபோன்று 8 பேரிடம் ரூ.10 லட்சம் வரை மோசடி செய்துள்ளதும், ஏர்வாடி பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வீடு கட்ட கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.45 ஆயிரம் பெற்று மோசடி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் முனீஸ்குமாரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்