விழுப்புரத்தில் படிக்கட்டில் மாணவர்கள் பயணம்: 5 பஸ்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை

படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்ததாக 2 அரசு பஸ் மற்றும் 3 தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-12-15 16:21 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பன் ஆகியோர் உத்தரவின்பேரில் விழுப்புரம் வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கடேசன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மாணிக்கம், கோவிந்தராஜ் ஆகியோர் நேற்று விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 2 அரசு பஸ்கள் மற்றும் 3 தனியார் பஸ்களில் பள்ளி- கல்லூரி மாணவர்கள், பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது .

இதையடுத்து 2 அரசு பஸ்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்துக்கும், 3 தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரத்தை அதிகாரிகள் அபராதமாக விதித்தனர்.

13 வாகனங்கள் பறிமுதல்

மேலும் கடந்த 3 நாட்களில் நடந்த சோதனையில் தகுதிச்சான்று, காப்பீட்டு சான்று, அனுமதிச்சீட்டு உள்ளிட்ட உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 8 சரக்கு வாகனங்கள், 3 ஆட்டோக்கள், ஒரு டாரஸ் லாரி, ஒரு கல்லூரி வாகனம் என 13 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தினர். அந்த வாகனங்களுக்கு விரைவில் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பஸ்சின் படிக்கட்டுகளில் நின்று மாணவர்கள் பயணம் செய்யாமல் இருப்பதை அந்தந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்