சீசன் டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள்

சீசன் டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள்

Update: 2021-12-15 15:36 GMT
சீசன் டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள்
கோவை

தமிழகத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதன்காரணமாக மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 

மாதந்தோறும் பெட்ரோலுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வேலைக்கு செல்லும் பலர் தற்போது மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்து அரசு பஸ்களில் பயணித்து வருகின்றனர். பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர்  இந்த சீசன் டிக்கெட்டை நம்பி உள்ளனர்.

கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறது. சீசன் டிக்கெட் கட்டணமாக மாதம் ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இந்த சீசன் டிக்கெட் வழங்க ஒரு கவுண்ட்டர் மட்டுமே உள்ளது. இதன்காரணமாக நீண்ட நேரம் பயணிகள் காத்திருந்து சீசன் டிக்கெட் வாங்குவதில் தவிக்கும் நிலை உள்ளது.


இந்த நிலையில் நேற்று சீசன் டிக்கெட் வாங்குவதற்கு கோவை காந்திபுரம் டவுண் பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்து அவதிப்பட்டனர். 
இது குறித்து பயணிகள் கூறியதாவது
தற்போதைய நிலையில் பெட்ரோல் விலை காரணமாக பணி புரியும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் செல்ல முடியாத நிலை உள்ளது. இதன்காரணமாக வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் மாதாந்திர சீசன் டிக்கெட் பெற்று வருகின்றனர். 


இங்கு சீசன் டிக்கெட் வழங்க ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்து கிடந்து டிக்கெட் பெற்று செல்ல வேண்டிய அவலம் உள்ளது. மேலும் திடீரென்று சீசன் டிக்கெட்டுக்கான பயண அட்டைகள் காலியாகி விட்டது என்று கூறிவிடுகின்றனர். 

இதனால் ஊழியர் ஒருவர் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் சென்று பயண அட்டை கொண்டு வரும்வரை வரிசையில் காத்திருக்க வேண்டியது உள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சீசன் டிக்கெட் வழங்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறுஅவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், சீசன் டிக்கெட்  பயண அட்டை காலியாகி விட்டது. இதையடுத்து மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து பயண அட்டை எடுத்து வர சிறிது நேரம் பிடித்தது. இதையடுத்து பயணிகளுக்கு தடையில்லாமல் சீசன் டிக்கெட்டுக்கான பயண அட்டை வழங்கப்பட்டது என்றனர்.

மேலும் செய்திகள்