கம்பம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்
லோயர்கேம்ப்-மதுரை குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பம் எம்.எல்.ஏ. அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் என்னுமிடத்தில் முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் மதுரைக்கு சிறப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை தமிழக அரசு கைவிட கோரியும், இதற்கு மாற்றுத்திட்டம் மூலமாக செயல்படுத்த தேனி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் கம்பத்தில் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.
அதன்படி நேற்று காலை முல்லைப்பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்க தலைவர் சதீஷ்பாபு தலைமையில் கம்பம் எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக விவசாயிகள் திரண்டு வந்தனர். அவர்கள் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடக்கோரியும், மாற்று திட்டங்கள் செயல்படுத்தகோரியும் கோஷமிட்ட படி ஊர்வலமாக வந்து முற்றுகையிட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். தகவலறிந்த கம்பம் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தனது அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் விவசாயிகளை அழைத்து மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் திட்டம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை அளிப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.