மாணவர் மணிகண்டன் தற்கொலை செய்ததாக பிரேத பரிசோதனை அறிக்கை
முதுகுளத்தூர் அருகே மாணவர் மணிகண்டன் தற்கொலை செய்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது என்றும், அவர் போலீஸ் தாக்கியதால் இறக்கவில்லை எனவும் மதுரையில் தமிழக ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.
மதுரை
முதுகுளத்தூர் அருகே மாணவர் மணிகண்டன் தற்கொலை செய்திருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது என்றும், அவர் போலீஸ் தாக்கியதால் இறக்கவில்லை எனவும் மதுரையில் தமிழக ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் தெரிவித்தார்.
மாணவர் மரண விவகாரம்
தமிழக சட்டம் ஒழுங்கு போலீஸ் ஏ.டி.ஜி.பி. தாமரைக்கண்ணன் மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் போலீஸ் நிலைய போலீசார் தாக்கியதில் மாணவர் மணிகண்டன் கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்ததாக பலவிதமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அன்றைய தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்த முயன்ற போது, அவர்கள் நிற்காமல் சென்று விட்டனர். உடனே போலீசார் அவர்களை பின்தொடர்ந்து சென்ற போது பின்னால் அமர்ந்திருந்த நண்பர் தப்பிச்செல்ல மணிகண்டன் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். அவரை வாகனத்துடன் போலீஸ் நிலையத்திற்கு இரவு 7 மணிக்கு அழைத்து வந்து விசாரிக்கப்பட்டது. அப்போது அவர் ஒரு மாணவர் என்றும் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும் மோட்டார் சைக்கிள் தொடர்பான ஆவணங்களை கேட்ட போது, அது குறித்து அவரிடம் எதுவும் இல்லை.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
பின்னர் 7.30 மணி அளவில் அவருடைய தாயாருக்கு நடந்த சம்பவங்களை தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வந்து மணிகண்டனை அழைத்துச் செல்லுமாறு கூறினோம். அவருடைய தாயார், உறவினர் ஒருவருடன் வந்து இரவு 8.15 மணிக்கு அவரை அழைத்துச் சென்றார்.
மணிகண்டனை அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தியது, அவருடைய தாயார் உறவினருடன் வந்தது, அவர்கள் போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு மணிகண்டனை நல்ல முறையில் வீட்டிற்கு அழைத்துச் சென்றது எல்லாம் போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
மணிகண்டன் வீட்டிற்கு சென்ற பிறகு நள்ளிரவு 2 மணி அளவில் இறந்துள்ளார். மறுநாள் போலீஸ் நிலையத்தில் மணிகண்டனின் தம்பி அலெக்ஸ்பாண்டியன் புகார் கொடுத்துள்ளார். அதில் போலீசார் மீது புகார் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மறுபிரேத பரிசோதனை
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு குழு அமைத்தும், போலீசார் மீது புகார் தெரிவித்துள்ளதால் பரமக்குடி ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தினர்.
விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. கடந்த 5-ந் தேதி 2 டாக்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் டாக்டர் ஒருவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடந்தது. இவை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
அதில் திருப்தி இல்லை என்று ஐகோர்ட்டுக்கு சென்றனர். கோர்ட்டு மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், தடய அறிவியல் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை நடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை தொடர்ந்து 8-ந் தேதி மறுபிரேத பரிசோதனை நடந்து முடிந்தது. அப்போது அவரது உடல் உறுப்புகள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
விஷம் குடித்து சாவு
நேற்று முன்தினம் அந்த பிரேத பரிசோதனையின் முடிவுகளை டாக்டர்கள் கொடுத்தனர். அதில் மணிகண்டன் விஷம் குடித்ததில் இறந்துள்ளார் என்று தடய அறிவியல் நிபுணர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர்.
இதன் மூலம் மணிகண்டன் போலீசார் தாக்கியதில் இறக்கவில்லை என்று தெரியவருகிறது. எனவே சமூக வலைதளங்களில் இது போன்ற தவறான தகவல்களை பரப்பக்கூடாது.
மேலும் சம்பவத்தன்று மணிகண்டன் வீட்டில் இருந்து விஷ பாட்டிலை கைப்பற்றி இருந்தோம். அது தொடர்பாக விசாரணை நடந்ததில் தற்போது, தற்கொலை என உறுதியாகி இருக்கிறது. மேலும் மாணவர் மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை மற்றும் போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணையும் தொடர்ந்து நடந்து வருகிறது. மேலும் மணிகண்டனுடன் வந்து தப்பிச்சென்ற மற்றொரு வாலிபர் யார்? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.
முடிவில்தான் ெ்தரியவரும்
போலீசார் தாக்கியதில் மனஉளைச்சலால்தான் மாணவர் இறந்தாரா? என்பது விசாரணை முடிவில்தான் தெரியவரும். இதுதவிர மணிகண்டன் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என்பதும் தெரியவந்திருக்கிறது.. அது எப்படி அவரிடம் வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. போலீசார் விசாரணையின் போது மாணவர் போலீஸ் நிலையத்திற்கு வந்தது முதல் அவரை அவரது தாயார் அழைத்து சென்ற அனைத்து வீடியோ பதிவுகளையும் அந்த ஊர்க்காரர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு காண்பித்துள்ளார். மணிகண்டன் மீது வேறு எந்த வழக்கும் இல்லை. மேலும் அவர் எதனால் விஷம் குடித்து இறந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை முடிவில்தான் தெரியவரும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அன்பு, ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில்வாகனன், ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.