கார் மோதி சுங்கச்சாவடி ஊழியர் சாவு; உறவினர்கள் போராட்டம்

குந்தாப்புராவில் கார் மோதி சுங்கச்சாவடி ஊழியர் பலியானார். சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-14 21:25 GMT
மங்களூரு: குந்தாப்புராவில் கார் மோதி சுங்கச்சாவடி ஊழியர் பலியானார். சுங்கச்சாவடி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கார் மோதி ஊழியர் பலி

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா சிரூரில் சுங்கச்சாவடி ஒன்று உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் ஊழியராக ராகவேந்திரா மேஸ்தா என்பவர் வேவை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை வழக்கம்போல் சுங்கச்சாவடியில் ராகவேந்திரா மேஸ்தா வேலை செய்து கொண்டிருந்தார். 

அப்போது அவர், சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் சாலையில் கோவா பதிவெண் கொண்ட கார், சுங்கச்சாவடி ஊழியர் ராகவேந்திரா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராகவேந்திரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

உறவினர்கள் போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்த பைந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் விபத்தில் பலியான ராகவேந்திரா மேஸ்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதையறிந்து அதிர்ச்சி அடைந்த ராகவேந்திராவின் உறவினர்கள் சுங்கச்சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், ராகவேந்திரா மேஸ்தா உயிரிழப்புக்கு சுங்கச்சாவடி நிர்வாகமே காரணம். அதனால், சுங்கச்சாவடி நிர்வாகம் விபத்தில் பலியான ராகவேந்திரா மேஸ்தாவின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அரசு சலுகைகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களிடம், பைந்தூர் போலீசார்  பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

இதற்கிடையே சுங்கச்சாவடி நிர்வாகத்தினர், இழப்பீடு உள்ளிட்ட உதவிகள் செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்