மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.63 கோடி கடன்
நெல்லை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.63 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் மு.அப்பாவு வழங்கினார்.
நெல்லை:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வழங்கினார். இதே போல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்துக்கான விழா பாளையங்கோட்டையில் நேற்று நடைபெற்றது. சபாநாயகர் மு.அப்பாவு தலைமை தாங்கி, மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களில் 819 மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.55.43 கோடி, நகர்ப்புற பகுதியில் 182 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7.64 கோடி என மொத்தம் 1,001 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.63.07 கோடி கடன் உதவிகளை வழங்கினார்.
மேலும் ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் சமுதாய பண்ணை பள்ளி மற்றும் திறன் பயிற்சி மையம் அமைத்து, பயிற்சி வழங்கும் நிதி உதவி திட்டத்தின் கீழ் பல்வேறு பஞ்சாயத்துக்களுக்கு காசோலைகளும் வழங்கப்பட்டது.
முன்னதாக மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள், காணி பழங்குடி மக்களின் தயாரிப்பு பொருட்கள் கண்காட்சியையும் சபாநாயகர் அப்பாவு பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் அழகிரி, வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், முன்னோடி வங்கி மேலாளர் கிரேஸ், மகளிர் திட்ட உதவி அலுவலர் ராமர், மாவட்ட சமூக நல அலுவலர் சரசுவதி, கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.