வெவ்வேறு விபத்துகளில் வங்கி ஊழியர் உள்பட 3 பேர் பலி
நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் வங்கி ஊழியர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
திசையன்விளை:
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்தவர் மாரி கணேஷ். இவருடைய மகன் ராஜ் (வயது 25). திசையன்விளையில் உள்ள ஒரு வங்கியில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் ஆத்தங்கரை பள்ளிவாசலில் வாடிக்கையாளரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோட்டார் சைக்கிளில் திசையன்விளை நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
ராமன்குடி அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறியது. இதனால் சாலையோரம் உள்ள மின்மோட்டார் அறை மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் (பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமன் (50). இவரது மகன் பிரசாந்த் (24). இவர்கள் இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலாளிகள். நேற்று முன்தினம் வழக்கம்போல் இருவரும் ஆடு மேய்த்து விட்டு மாலையில் பருத்திப்பாடு அருகே சுருளை விலக்கு பகுதியில் ஆடுகளை சாலையோரமாக வீட்டுக்கு ஓட்டி வந்தனர்.
அப்போது பின்னால் வந்த அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி வந்த ஜீப் ராமன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன், அரசு ஜீப்பை ஓட்டி வந்த நெல்லை வீரமாணிக்கபுரம் பெருமாள் மகன் இசக்கி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ராதாபுரத்தை அடுத்த சூச்சிகுளம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் மணி என்கிற மாசானம் (58), கொத்தனார். இவர் தன்னுடைய மோட்டார்சைக்கிளில் காவல்கிணறு மங்கம்மாள் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மாசானம் மீது மோதிவிட்டு நிற்காமல் போய்விட்டது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.