மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டம்

Update: 2021-12-14 19:39 GMT
சேலம், டிச.15-
உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 323 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறியல் போராட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலகம் நோக்கி வருவதற்கு முயற்சி செய்தனர். அதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பங்கி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட 16 பெண்கள் உள்பட 46 பேரை கைது செய்தனர்.
எடப்பாடி
எடப்பாடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அம்மாசி தலைமை தாங்கினார். 
போராட்டத்தின் போது 75 சதவீதத்திற்குள் ஊனமாக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.3 ஆயிரமாகவும், 75 சதவீதத்திற்கு மேல் ஊனமாக இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் கிளை செயலாளர் வடிவேலு, கார்த்தி, காவேரி, கந்தசாமி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 79 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டூர்
இதே போல மேட்டூர் ஸ்டேட் பேங்க் முன்பு மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க கொளத்தூர் ஒன்றிய தலைவர் ஜான் பெர்னாண்டஸ் தலைமை தாங்கினார். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 66 மாற்றுத்திறனாளிகளை மேட்டூர் போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்
ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்க நிர்வாகி பொ.பாரதி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கந்தன், காளிதாஸ், அழகுவேல், சின்னதுரை, சுமதி, இளங்கோ, காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட மாற்றுத்திறனாளிகள் 132 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், எடப்பாடி, மேட்டூர், ஆத்தூரில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட மொத்தம் 323 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்