வீட்டின் பூட்டை உடைத்து 14½ பவுன் நகை- பணம் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 14½ பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2021-12-14 19:08 GMT
பெரம்பலூர்:

வீட்டின் பூட்டு உடைப்பு
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள மின்நகர் 2-வது குறுக்குத்தெருவில் பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருபவர் கதிர்வேல். மரத்தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களது மகன் புண்ணியமூர்த்தி, மகள் தேவிகா. இதில் புண்ணியமூர்த்தி சென்னையில் உள்ள பிரபல தனியார் மோட்டார் நிறுவனத்தில் பயிற்சியாளராக வேலை பார்த்து வருகிறார். தேவிகா கள்ளக்குறிச்சியில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கதிர்வேல், விஜயலட்சுமி ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர். நேற்று காலை 6.30 மணி அளவில் அந்த வீட்டின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த வீட்டின் உரிமையாளர், இது குறித்து விஜயலட்சுமிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
நகை- பணம் திருட்டு
இது பற்றி விஜயலட்சுமி பெரம்பலூர் செல்வம் நகரில் வசிக்கும் தனது சகோதரர் சுரேசுக்கு அளித்த தகவலின்பேரில் சுரேஷ் அங்கு வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விஜயலட்சுமி குடும்பத்தினர் வீட்டில் இல்லை என்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் வைத்திருந்த தங்க சங்கிலிகள், மோதிரம், தோடு, ஜிமிக்கி உள்பட சுமார் 14½ பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றுள்ளனா் என்பது ெதரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் அங்கு சென்று வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் மூலம் துப்பு துலக்கப்பட்டது. திருட்டு குறித்து விஜயலட்சுமி பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
பெரம்பலூர் நகரில் அடிக்கடி நடந்து வரும் திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க தனித்தனி போலீஸ் படை அமைக்க வேண்டும் என்றும் குற்றப்பிரிவுக்காக தனி போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், தமிழக அரசுக்கும், போலீஸ் டி.ஜி.பி.க்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்